Wednesday, July 11, 2018


ஆலக்கிராமம் அருள்மிகு திரிபுரி சுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் திருக்கோயில்


ஆலக்கிராமம் அருள்மிகு திரிபுரி சுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் திருக்கோயில்

வளநாட்டில் வரலாற்றுப்புகழ் வாய்ந்த காஞ்சிமண்டலத்தில் புகழ்பெற்ற மயிலம் அருள்மிகு முருகப்பெருமான் ஆலயத்திற்கு மேற்குதிசையில் வராகநதியின் (தொண்டியாறு) வடகரையில் அமைந்துள்ள ஊர் ஆலக்கிராமம்.

இக்கிராமத்தில் பல்லவர்காலத்திற்கு முன்னர் (1500 ஆண்டுகளுக்குமுன்னர்) கட்டப்பெற்ற பழமையான சிவாலயம் உள்ளது, இந்த ஆலயத்தில் இப்பூவுலகு அனைத்திற்கும் அருள்பாலிக்கும் சிவன் எமதண்டீஸ்வரர் என்ற நாமத்தோடு, அம்மைதிரிபுரசுந்தரி என்கின்ற நாமத்தோடும் அருளாட்சிபுரிந்து வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோயிலில்,வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பீடத்தில் பிள்ளையார் சிற்பம் உள்ளது. தமிழகத்தில் உள்ள விநாயகா் சிற்பங்களில் இதுவே காலத்தால் முந்தையது என கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐரா மகாதேவன் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் கூட்டேரிப்பட்டு அருகில் ஆலகிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் என்ற நீண்ட ஆயுளை வழங்கும் பரிகார ஸ்தலம் உள்ளது. 15௦௦ ஆண்டுகள் மிகவும் பழமையான இந்த சிவன் கோயில் தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் புதிதாக வட்டெழுத்து பொறிக்கப்பட்ட கல்லில் மிகவும் தொன்மையான பிள்ளையார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. தற்பொழுது இது இந்திய வரலாற்றுக்கு புதிய வரவாக அமைந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்..

இது தொடர்பாக கோயில் பூசாரி மற்றும் தமிழ் ஆய்வாளர் சுந்தரமூர்த்தியைச் சந்தித்து விவரங்கள் கேட்டேன். "கண்டெடுக்கப்பட்ட இந்த விநாயகர் சிலை, இக்கோயிலின் தெற்கு வெளிப்புற அதிட்டானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இச் சிற்பம் 75செ.மீ உயரம் மற்றும் 40 செ.மீ அகலம் கொண்ட நீண்ட ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிள்ளையார் பீடத்தில் 3 வரிகளில் "பிரமிறை பன்னூற- சேவிக - மகன்- கிழார்- கோன்- கொடுவித்து" என்ற வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக முதன் முதலில், விழுப்புரத்தைச் சார்ந்த கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் கோவிலுக்கு வந்து சிலையை ஆய்வு செய்து சொல்ல. பின்பு தொல்லியல் நிபுணர்கள் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் சிலையில் உள்ள வட்டெழுத்துக்களை பர்வையிட்ட பிறகு, "இந்த எழுத்துக்களின் வடிவம் பூளாங்குறிச்சி என்ற எழுத்து வடிவத்துக்கு பிறகும், பிள்ளையார் பட்டி குடைவரைக்கோயில் கல்லெழுத்துக்களின் வடிவத்துக்கு முந்தையதும்மாக உள்ளது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறிச் சென்றுள்ளனர்". என்று நம்மிடம் குறிபிட்டார் தமிழ் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி. எனவே இந்த விநாயகர் வழிபாடு என்பது, கி.பி 4 ம் நூற்றாண்டு இறுதி காலத்திலும்,கி.பி 5 ம் நூற்றாண்டு தொடக்க காலத்திலும் ஆர்கராமூர் என்ற ஆலகிராமம் என்ற ஊரில் மூத்த பிள்ளையார் சிலையை நிறுவி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

இக்கோயில் எமனுக்கு தோஷம் நீக்கிய சிவன் எமதண்டீஸ்வரர் என்று பெயர் கொண்டுள்ளார். எமனுக்கு தோஷம் நீக்கிய ஸ்தலமாகவும் சனீஸ்வரர் வணங்கிய ஸ்தலமாகவும் விளங்குகிறது.

பிரதோஷ காலங்களில் நந்தி சுவாசிப்பதை இங்கு உணரமுடிகிறது என்பது தனி சிறப்பு. சுவாமி இடப்பக்கமும் அம்பாள் வலப்பக்கமும் மையமாக ஜீவ சமாதி அமைந்துள்ளது. அம்பாள் ஏழு நாட்களுக்கும் ஏழு வேறுபட்ட முகங்களில் காட்சி தருகிறார். படர்ந்து விரிந்த ஆலமரத்தின் கீழே ஆண், பெண் நாக தேவதைகள் காட்சி தருகிறார்கள். எம தோஷம் நீக்கும் திருக்குளத்தின் நடுவே கங்கா தேவி தோஷம் நீக்கும் பொருட்டு காட்சி தருகிறார். அம்பாள் கருணையையும் சுவாமியின் அருளையையும் பெறவேண்டி நம் காஞ்சி மாமுனிவர் மகாபெரியவர்கள் இந்த ஸ்தலத்தில் 1943, 1952, 1966, 1969, 1972 ஆம் ஆண்டுகளில் வருகை தந்து வழிபட்டுள்ளனர் என்று எனக்கு இவர்கள் தெரியப்படுத்தியது கூடுதல் சிறப்பு. நாமும் ஒருமுறை இந்த வழமையான ஆலயத்திற்கு விஜயம் செய்து இறைவன் அருளைப் பெறலாமே!.

கோயில் வழி: திண்டிவனம் to விழுப்புரம் வழியில் கூட்டேரிபட்டில் இறங்கி, மேற்கே மூன்று கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். பேருந்து எண்-8,24 மற்றும் ஆட்டோ வசதி உண்டு.








Yamadhandeshwarar Temple Alagramam.
Alagramam, Tamil Nadu 604302
097902 38693




No comments:

Post a Comment